பருப்புக் கொழுக்கட்டை செய்வது எப்படி

பருப்புக் கொழுக்கட்டை செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

ரெடிமேடு அடைமாவு அல்லது வீட்டில் பக்குவப்படுத்திய உலர் அடை மாவு – ஒரு கப்,
ஓட்ஸ் – அரை கப்,
தேங்காய்த்துருவல் – 3 டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 2,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

பச்சை மிளகாயையும் கொத்தமல்லித் தழையையும் கழுவிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் ஒரு கப் நீரைக் கொதிக்க வைத்து, ஓட்ஸ், அடை மாவு தவிர, மீதி இருக்கும் பொருட்களான தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைப் போடவும். பிறகு, அடை மாவையும் நீரில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, நன்றாகக் கிளறவும். அடுப்பை `சிம்’மில் வைத்து, கட்டிதட்டாமல் கிளறவும். பிறகு, பாத்திரத்தைக் கீழே இறக்கி வைத்து, ஓட்ஸைப் போட்டுக் கிளறவேண்டும். ஆறிய பிறகு, உருண்டைகளாகவோ கொழுக் கட்டைகளாகவோ பிடித்துவைத்து, இட்லிப் பாத்திரத்தில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

அடை மாவு தயாரிக்கும் முறை: கடலைப் பருப்பு – அரை கப், துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு – கால் கப், பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி – ஒன்றரை கப், காய்ந்த மிளகாய் – 8. இவை எல்லாவற்றையும் மெஷினில் கொடுத்து, ரவை பதத்துக்கு உடைத்து வைத்துக்கொண்டால், ரெடிமேடு அடை மிக்ஸ் தயார். (வீட்டிலேயே மிக்ஸியிலும் உடைத்துக்
கொள்ளலாம்.)

பலன்கள்:

புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் ஆகியவை கிடைக்கும் என்பதால் சமச்சீரான உணவு இது. தசைகளுக்கு வலுவைத் தரும்.