பூமியைக் காக்க உண்ண வேண்டிய உணவுகள்

பூமியைக் காக்க உண்ண வேண்டிய உணவுகள்

பூமிக்குப் பேரழிவை ஏற்படுத்தாமல், ஆயிரம் கோடி பேருக்கு உணவளிக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஓர் உணவுப் பழக்க முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்குப் பேரழிவை ஏற்படுத்தாமல், ஆயிரம் கோடி பேருக்கு உணவளிக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஓர் உணவுப் பழக்க முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டுகளில், கோடிக்கணக்கான கூடுதல் மக்கள்தொகைக்கு எப்படி உணவிடப் போகிறோம் என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு வல்லுநர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

அதன்படி, ‘புவிசார்ந்த ஆரோக்கியத்துக்கான உணவுப் பழக்கம்’ என்று அவர்கள் கூறியுள்ள விடை, இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கவில்லை.

ஆனால், நமது உணவுத் தட்டுகளில் பெருமளவில் குவித்துவைக்கும் உணவுப் பொருட்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், குறைவாகச் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களைப் பரிந்துரை செய்வதாக இருக்கிறது.

புதிய உணவுப் பழக்கத்துக்கு நாம் என்னென்ன மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டியிருக்கும்?

நீங்கள் தினமும் இறைச்சி சாப்பிடுபவராக இருந்தால், இதுதான் முதலாவது எச்சரிக்கை. சிவப்பு இறைச்சி (ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி) என்றால் வாரத்தில் ஒரு பர்கர் அல்லது மாதத்துக்கு ஒரு பெரிய இறைச்சித் துண்டு என்பதுதான் உங்களுக்கான அளவு.

வாரம் சிறிதளவு மீன் மற்றும் அதே அளவு கோழி இறைச்சி சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கான புரதச்சத்தின் மீதிப் பகுதி, தாவரங்களில் இருந்துதான் வர வேண்டும்.

அதற்காக பயறு வகைகள் மற்றும் பீன்ஸ், சுண்டல், அவரை போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

நாம் சாப்பிடும் உணவில் பாதியளவு பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும் என்பது முக்கியத்துவம் பெறும்.

சரி, புதிய உணவுத் திட்டத்தின்படி உண்ணும் உணவுகள் சுவையில் மோசமாக இருக்குமா?

அவ்வளவு மோசமாக இருக்காது என்று ஹார்வர்டில் உள்ள ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் வால்டர் வில்லெட் கூறுகிறார். தான் சிறு வயதில் பண்ணையில் இருந்தபோது தினமும் முக்கால்வாசி உணவாக சிவப்பு இறைச்சி சாப்பிட்டு வந்த நிலையில், இப்போது புவிசார்ந்த ஆரோக்கிய உணவு முறைக்கு நன்கு பழகிவிட்டதாக அவர் கூறுகிறார்.

அவர் மேலும், ‘இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. அந்த உணவுகளை எடுத்து வெவ்வேறான ஆயிரம் வகைகளாக ஆக்கிக்கொள்ள முடியும். உணவை மறுக்கும் பட்டியலை நாம் தரவில்லை. இது ஆரோக்கியத்தை தரும் உணவுப் பட்டியல். மாற்றிக்கொள்ளக் கூடியது, அனுபவித்து சாப்பிடக்கூடியது’ என்கிறார்.

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானது இந்தத் திட்டம்.

ஐரோப்பாவும் வடஅமெரிக்காவும் சிவப்பு இறைச்சியின் தேவையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கிழக்கு ஆசியா மீன் தேவையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆப்பிரிக்காவில் மாவுச்சத்துள்ள காய்கறிகளை குறைக்க வேண்டும் என்கிறார்கள்.

‘இவ்வளவு பெரிய அளவில், இந்த வேகத்தில் உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்கு மனிதகுலம் ஒருபோதும் முயற்சி செய்தது இல்லை. நல்லதோர் உலகை உருவாக்குவதற்கு முயற்சிக்கும் காலம் வந்துவிட்டது’ என்று ஸ்டாக்ஹோம் ரெசிலியன்ஸ் மையத்தின் உதவிப் பேராசிரியர் லைன் கோர்டன் கூறுகிறார்.

உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்கு, சிவப்பு இறைச்சியின் மீது வரி விதிப்பது தேவையான ஒரு விஷயமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உலகெங்கும் இருந்து 37 அறிவியல் நிபுணர்கள் ‘ஈட்- லான்செட்’ என்ற கமிஷனின் அங்கமாக ஒன்று சேர்க்கப்பட்டனர்.

விவசாயம் முதல் பருவநிலை மாற்றம், சத்துணவு என பல துறைகளைச் சேர்ந்த அவர்கள், புதிய உணவுப் பழக்கம் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு இரண்டு ஆண்டு காலம் ஆனது.

கடந்த 2011-ல் உலக மக்கள்தொகை 700 கோடியைத் தொட்டுவிட்டது. 2050-ல் இது ஆயிரம் கோடியாக உயர்ந்து, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பரிந்துரைக்கப்பட்டுள்ள உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் ஆண்டுதோறும் 1.1 கோடிப் பேர் இறப்பதைத் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் புற்றுநோய்கள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நோய் பாதிப்பு இதில் பிரதானமாக உள்ளது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் மிகப் பெரிய உயிர்க்கொல்லிகளாக இவை இப்போது இருக்கின்றன.

உணவு உற்பத்தி மற்றும் காடுகளை உருவாக்கும் செயல்களுக்காக நிலங்களைப் பயன்படுத்துவது, உலக பசுமைக்குடில் வாயுக்கள் உற்பத்தியில் கால் பாகம் அளவை எட்டுகிறது.

மின்சார உற்பத்தி, சூடுபடுத்துதல் ஆகியவற்றுக்கு இணையான அளவு பாதிப்பு இது. ரெயில்கள், விமானங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களால் ஏற்படும் பாதிப்பைவிட கணிசமான அளவுக்கு அதிகம் இது.

உணவுத் துறையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை உற்று நோக்கினால், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் முக்கியப் பங்காற்றுவதைக் காணலாம். உலகெங்கும் மனிதர்களால் உருவாக்கப்படும் பசுமைக்குடில் பாதிப்பு வாயு உற்பத்தியில், கால்நடைகளால் ஏற்படும் பாதிப்பு 14.5 முதல் 18 சதவீதம் வரை உள்ளது.

வெப்பமாக்கும் மற்ற வாயுக்களைப் பார்த்தால், மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்கள் உற்பத்தியில் விவசாயம் பெரிய பங்காற்றுகிறது.

அதேபோல தண்ணீர் பயன்பாட்டைப் பார்த்தால், விவசாயமும் உணவு உற்பத்தியும் மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கின்றன. உலக அளவில் 70 சதவீத தண்ணீர், பாசனத்துக்குச் செலவிடப்படுகிறது.

புவிசார்ந்த உணவுப் பட்டியல் பூமியைக் காப்பாற்றுமா?

அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு உணவளிக்க, உணவு வீணாவதை பாதியாகக் குறைப்பதும், இப்போதுள்ள விவசாய நிலங்களில் உற்பத்தியைப் பெருக்குவதும் தேவைப்படுகின்றன.

‘பசுமைக்குடில் வாயு உற்பத்தியை குறைந்தபட்ச அளவாக்க வேண்டும் என்பது மட்டும் நோக்கமாக இருந்தால், எல்லோரும் சமைக்காத உணவு முறைக்கு மாறும்படி நாம் கூறலாம்’ என்று பேராசிரியர் வில்ெலட் கூறுகிறார்.

ஆனால் சமைக்காத உணவுகள் ஆரோக்கியமான உணவாக இருக்குமா என்று தெளிவாகத் தெரியவில்லை என்கிறார் அவர்.

பூமியையும், பூமிவாழ் மக்களையும் காக்க நாம் நம் உணவுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்பது புரிகிறது.