கொரோனா வைரஸ் மற்றும் COVID19 பற்றி நீங்கள் அறிந்திராத சில விஷயங்கள் தெரிஞ்சிக்கங்க

கொரோனா வைரஸ் மற்றும் COVID19 பற்றி நீங்கள் அறிந்திராத சில விஷயங்கள் தெரிஞ்சிக்கங்க

கொரோனா வைரஸ் என்னும் கோவிட் 19- உலக போரை விட கொடியதாக இருக்கிறது . கொரோனா வைரஸ் பற்றிய பயமும் பதட்டமும் அச்சுறுத்தலும் உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. எப்படி பரவிக் கொண்டிருக்கிறது, எந்த ரூபத்தில் யாருக்கு வரும் என்பது தெரியாத காரணத்தால், பல குழப்பங்களும் வீண் வதந்திகளும் கூடு பரவி வருகின்றன. அது குறித்த முறையான விழிப்புணர்வு தேவை.

அதனால் உங்களுக்குத் தெரியாத நிறைய குழப்பமான விஷயங்களுக்கான தீர்வாக இந்த தொகுப்பு இருக்கும்.தற்போது எல்லோர் காதுக்கும் கேட்கும் ஒரு பெயர் என்றால் அது கொரோனா வைரஸ் தான். அந்தளவுக்கு சீனாவில் ஒரு கொடூரமான பாதிப்பை காட்டி வருகிறது. சீன மாகாணமான ஹூபேயில் 2019 டிசம்பரில் தோன்றிய இந்த சுவாச நோய் இன்றளவும் நின்றபாடில்லை.

கட்டுக்குள் அடங்காமல் இருக்கும் இந்த வைரஸை பார்த்து பயப்படாதவர்கள் யாரும் கிடையாது. உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் கூட மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்கள். ஜனவரியில் தான் இந்த வைரஸை கண்டறிந்தனர். இது SARS-CoV-2 என அழைக்கப்படும் ஒரு கொரோனா வைரஸ் வகையைச் சார்ந்தது என்பது கண்டறியப்பட்டது. 2019 ல் ஆரம்பமானதால் இதை COVID-19 என்று கூறுகின்றனர்.

​கொரோனா வைரஸ் அமைப்பு மற்றும் தோற்றங்கள்

இந்த வைரஸ் கொரோனவிரிடே என்ற குடும்பத்தை சார்ந்தது. மருத்துவர்கள் இதை நுண்ணோக்கி வழியாக பார்த்த போது இந்த வைரஸ் பார்ப்பதற்கு கூர்முனைகளுடன் அதன் வைரஸ் சுவர்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தென்படுகிறதாம். பார்பதற்கு கீரிடம் மின்னுவது போல இருப்பதால் (கொரோனா – லத்தீன் மொழியில் கீரிடம்) அதற்கு கொரோனா வைரஸ் என்று பெயரிட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸ் ஓரிழை ஆர். என். ஏ வை கொண்டுள்ளது. இதன் கூர்முனைக் கால்கள் போன்ற பகுதி நம் உடம்பிற்குள் நுழைந்ததும் நம் செல்களுடன் பிணைக்கப்பட்டு விடுகிறது. பிறகு இது ஆர்.என்.ஏ மற்றும் சில நொதிகள் மூலம் செல்லின் மூலக்கூறு இயந்திரங்களைப் பயன்படுத்தி வைரஸ்களை பல மடங்காக பெருக்க ஆரம்பிக்கின்றன. இப்படியே ஒரு செல்லாக பரவி பரவி மற்ற செல்களையும் பாதிக்கிறது. இப்படி இந்த வைரஸ்கள் நம்முள் சுழற்சி செய்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

​இந்த வைரஸ் எங்கே இருந்து வந்திருக்கும்?

இந்த வைரஸ் முதன் முதலில் 11 மில்லியன் மக்களைக் கொண்ட சீன நகரமான வுஹானில் தோன்றியதாக கூறப்படுகிறது. இங்கே தான் கடல் மீன்கள், வெளவால், பாம்பு இறைச்சிகள், பாங்கோலின் இறைச்சி களுக்கான சந்தை உள்ளது. செத்த விலங்களிடமிருந்து பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் முதலில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் சந்தையில் இல்லை என்றும் வேறு எங்கோ இருந்து மார்க்கெட்டிற்கு பரவி இருக்கலாம் என்றும் டிசம்பர் 1 ல் வெளியிடப்பட்ட மருத்துவ இதழ் தி லான்செட் தெரிவித்து உள்ளது. ஆனால் அதுகுறித்து பெரிதாக சிரத்தை எடுத்துக் கொள்ளப்படாமல் விட்டதால் இவ்வளவு பெரிய விளைவுகளை இந்த வைரஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

​கொரோனா வைரஸ் இறப்பு விகிதம்

2019 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்த வைரஸ் 50 நாடுகளுக்கு பரவி இருப்பதாகவும், ஜனவரி மாதத்தில் இருந்து இதன் இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறப்படுகின்றன. இந்த வைரஸ் பரவும் வேகத்தை ஒரு ஆன்லைன் கருவி மூலம் நோய் கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீன சுகாதார வல்லுநர்கள் தகவல்களை திரட்டி வருகின்றனர். சீனாவில் அதிகமாகவும் அதற்கு அடுத்த படியாக தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் போன்ற மாநிலங்களிலும் இது வேகமாக பரவி வருகிறது. ஜப்பானில் உள்ள டயமண்ட் இளவரசி என்ற கப்பலில் இருந்த 705 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

​புது வைரஸ் என்று எப்படி கண்டறிந்தார்கள்?

பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நிகழ்த்தப்பட்டது. வைரஸின் மரபணு குறியீட்டை அறிந்து கொள்வதன் மூலம் அதற்கான மருந்துகளையும் தடுப்பு மருந்துகளையும் மருத்துவர்களால் கண்டறிய முடியும்.

பரவும் விதம்

பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல் மற்றும் நேரடித் தொடர்பு வழியாக மற்றொருவருக்கு எளிதாக பரவி விடுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகளைப் போலவே தான் இருக்கும் என்பதால், சாதாரண காய்ச்சல் மற்றும் இருமல், சளி ஆகிய அறிகுறிகள் தோன்றியவுடனேயே மருத்துவரிடம் தக்க ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

​கொரோனா வைரஸ் எவ்வளவு தூரம் தொற்றக் கூடியது

இதன் வீரியம் குறித்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வைரஸ்க்கும் ஒரு மெட்ரிக் வால்யூ என்று ஒன்று இருக்கும். இதை R0 என்ற குறியீட்டால் மதிப்பிடுகின்றனர். அதாவது பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்கு இது பரவக் கூடியது என்பதைத் தான் இது குறிக்கிறது .

அம்மை போன்ற தொற்று நோய்கள் 12 முதல் 18 வரை R0 ஐக் கொண்டிருக்கின்றன. SARS தொற்றுநோயானது சுமார் 3 R0 ஐக் கண்டிருந்தது ஆனால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் R0 மதிப்பை மட்டும் இன்னும் மருத்துவர்களால் கணிக்க முடியவில்லை. இப்பொழுது பரவும் விகிதத்தை வைத்து R0 1. 4 – 3.8 ஆக உள்ளது. இன்னும் வீரியம் அதிகரித்து கொண்டே வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

​இந்த வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும்

இது SARS மற்றும் MERS போன்ற தொற்று நோயுடன் தொடர்புடையது. எனவே இது மேற்பரப்பில் 9 நாட்கள் வரை நீடிக்க கூடும் என்று ஜர்னல் ஆஃப் ஹாஸ்பிடல் இன்ஃபெக்ஷனில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வைரஸ் உயிர்வாழ்வை மதிப்பிடும்போது பல காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பயம்

சீனாவில் இது பெரிதாக பரவி வந்தால் கூட இன்னும் இந்த நோய் பரவுதல் தொற்று நோயாக உருப்பெற வில்லை என்பதை உலக சுகாதார நிறுவனம் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இது மக்களிடையே கண்டிப்பாக ஒரு பயத்தை ஏற்படுத்திச் செல்லும் என்றும் அதன் நிறுவனத் தலைவர் கூறியுள்ளார். மேலும் சமூக ஊடகங்களும் இது குறித்து மக்களிடையே நிறைய தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பி வருவதாக கூறியுள்ளார்.