கொரோனா பற்றிய இந்த வதந்திகளை நம்பாதீங்க எப்படி எச்சரிக்கையாக இருக்கலாம்

கொரோனா பற்றிய இந்த வதந்திகளை நம்பாதீங்க எப்படி எச்சரிக்கையாக இருக்கலாம்

உலக மக்கள் அனைவரது எண்ணமும் தற்போது ஒன்றுதான். உடலை வலுவாக வைத்துகொள்ளதான் எல்லோரும் முயற்சி செய்து வருகிறார்கள். அந்தளவு கொரோனா பற்றிய பாதிப்பு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் விளைவு எதை நம்புவது எதை நம்பக் கூடாது என்று ஆராய்ச்சி செய்யக் கூட மக்களுக்கு நேரமில்லை. வாட்ஸப், பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் கொரனோ என்ற பெயரை படித்தாலே போதும் அதை ஃபார்வர்டு பண்ண ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் பொய் வதந்திகளையும் மக்கள் நம்பி வருவது தான் கூடுதல் விளைவை உண்டாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மருத்துவர்களின் கருத்துகளுக்கும், பரிந்துரைகளுக்கும் இங்கே மதிப்பு இருக்கோ இல்லையோ அதைவிட வலைதளங்களில் வரும் செய்திகளுக்கு நம்பிக்கை இருந்து வருகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் இணையத்தில் காணும் அணைத்து செய்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம்.

இந்த செய்திகள் எல்லாம் உங்களிடையே புரளிகளை கிளப்ப வடிவமைக்கப்பட்டது மட்டுமே. குறிப்பாக கொரோனா பரப்பப்படும் விதம், அவை தொற்றாக பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இவைகள் குறித்து நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. அப்படி பரப்பப்பட்ட பொய்யான வாட்ஸப் செய்திகள் எவை என உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

​கொரோனா பற்றிய தவறான வதந்திகள்

வைரஸின் தோற்றம், அளவு மற்றும் வெளிப்பாடு ஆபத்து பற்றிய தகவல்களை விவரிக்கும் தவறான செய்திகளை யுனிசெப் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இவைகள் தான் சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு வரும் செய்திகள். கொரோனா காற்றின் மூலம் பரவுவதில்லை என்ற செய்தி முற்றிலும் தவறானது. இது பாதிக்கப்பட்ட நபரின் தும்மல், இருமல் சளி வழியாக பரவுகிறது. மேலும் சூடான வெப்பநிலையில் இந்த வைரஸ் உயிர் வாழாது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதே போல் பரவலாக பரப்பப்பட்ட தவறான செய்திகளை பற்றி கீழே காண்போம்.

​15 நிமிடங்களுக்கு தண்ணீர் அருந்த வேண்டும் : தவறான செய்தி

பழைய ஜப்பானிய மருத்துவர்கள் கூறியதாக கொரோனா வைரஸ் வறண்ட தொண்டை மற்றும் வறண்ட வாயில் தான் இனப்பெருக்கம் செய்கின்றனர் எனவே 15 நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீர் அருந்துங்கள் என்று தவறான செய்தி ஒன்று பரப்பப்பட்டது. உண்மையைச் சொல்லப்போனால் இந்த கொடிய தொற்றுக்கு இதுவரை எந்த தீர்வும் கண்டறிய முடியவில்லை. எனவே தண்ணீர் குடிப்பது மட்டும் உங்கள் பிரச்சினையை தீர்க்காது. நீர் நமது உடலுக்கு நீர்ச்சத்தை வேண்டும் என்றால் கொடுக்கும், வெளிப்புற தொற்று நோய் விளைவுகளை குறைக்கும். ஆனால் நீரைக் கொண்டு கொரோனா வைரஸை எல்லாம் கொல்ல முடியாதாம்.

கொரோனா தாக்காம நீங்க ஸ்டிராங்கா இருக்க என்னென்ன உணவெல்லாம் சாப்பிடலாம்?

​10 விநாடிகள் மூச்சை பிடித்துக் கொள்ளுங்கள்

கொரோனா பற்றி பரவலாக பரந்த செய்திகளில் இதுவும் ஒன்று. நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள 10 விநாடிகளுக்கு இருமல் இல்லாமல் மூச்சை பிடிக்க முயன்றால் அவருக்கு தொற்று நோய் ஆபத்து இல்லை என்று பரவப்பட்டது. இதுவும் ஒரு தவறான வதந்தி மட்டுமே. காரணம் கொரோனா தாக்கம் இருக்கிறதா இல்லையா எனக் கண்டறிய இது சிறந்த மருத்துவ வழி அல்ல என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி எந்தவித விஷயங்களும் மருத்துவர்களாலோ நோய்த்தொற்று ஆராயும் நிபுணர்களாலோ சொல்லப்படவில்லை. வாய்வழியாகப் பரப்பிவிடப்படும் செய்திகளைக் கேட்டு எதையாவது தவறாக செய்து கொண்டிருக்க வேண்டாம்.

​குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும்

கொரோனா தாக்காமல் இருக்க குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் நம்மிடம் எதுவும் கூறவில்லை. எனவே இது சரியான தகவல்கள் என்று நம்மால் நம்ப முடியாது.

சோடா பானங்கள் பொதுவாகவே நாம் தவிர்க்க வேண்டிய விஷயம். அதில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கூறுகள் நிறைய இருக்கின்றன. ஆனால் சமீபத்தில் வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்கான வழிகளில் ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற பெற்றோர்கள் என்ன செய்யணும்?

​கொரோனாவிலிருந்து பாதுகாக்க மாஸ்க் மட்டும் போதுமானது

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ளும் எவரையும் இந்த வைரஸ் தாக்கக் கூடும். எனவே வெறும் மாஸ்க்கை கொண்டு எந்த வைரஸையும் உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. மாஸ்க் என்பது மருத்துவர்கள், நோயாளிகளின் உறவினர்கள் போன்றவர்கள் தொழில்நுட்ப ரீதியாக பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதால் மாஸ்க் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் மாஸ்க் என்பது நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான வழி என்று போதிய ஆதாரங்களோ நிரூபிக்கப்பட்ட உண்மைகளோ இல்லை. அதனால் வெறுமனே மாஸ்க் அணிந்து கொண்டு, நம்மை கொரோனா தாக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பது முற்றிலும் தவறு.

​பூண்டு தண்ணீர் குடித்தால் குணமாகும் என்பது தவறான செய்தி

பழைய சீன வைத்தியர்கள் சுடுநீரில் பூண்டு பற்கள் போட்டு குடித்து வந்தால் கொரோனா நோய் குணமாகும் என்று சொன்னதாக கூறப்படுகிறது. பூண்டில் ஏராளமான ஆன்டி மைக்ரோபியல் தன்மை இருந்தாலும் இது இன்னும் கொரோனா வைரஸை கொல்லும் என்பதற்கு உண்மையான ஆய்வுத் தகவல்கள் எதுவும் இல்லை என்கிறது உலக சுகாதார நிறுவனம். மறுபடியும் சொல்லப் போனால் இந்த வைரஸை அழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை.

பூண்டு பாக்டீரியல் தொற்றுக்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது தான். அதுவே கொரானாவுக்கான தீர்வா என்று சொல்லி விட முடியாது.

கொரோனா வைரஸ் உணவு வழியாக பரவுமா? எந்தெந்த உணவை சாப்பிட வேண்டாம்…

​வீண் வதந்திகள்

கொரோனா ஒரு பரவலான தொற்று நோயாகும். மக்கள் வீண் வதந்திகளையும் வாட்ஸப் செய்திகளை மட்டுமே நம்பியே முடிவெடுக்காதீர்கள். நோய் தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்வது மட்டுமே சிறந்தது. கை வைத்தியம், நாட்டு வைத்தியம், 15 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்க சொன்னார்கள் என்று உட்கார்ந்து இருக்காதீர்கள். ஏனெனில் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது. இதனால் சிலருக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது. சிலர் இதிலிருந்து குணமடைந்தும் உள்ளனர். நல்ல சுகாதாரத்தை கடைபிடிப்பது மட்டுமே எந்த நோயிலிருந்தும் நம்மை காத்துக் கொள்ள மிகச் சிறந்த வழி என்கிறார்கள் மருத்துவர்கள்.

​விழிப்போடு இருங்கள்

அதே சீனாவில் இருந்து வரும் உணவுகள், குளிர் பானங்கள் இவற்றால் கொரோனா வைரஸ் பரவாது, அதுவும் ஒரு தவறான கருத்து. அதே மாதிரி மாட்டு சிறுநீரகத்தால் கொரோனா தொற்றை குணப்படுத்த முடியாது இதுவும் தவறான செய்தியே என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது நாங்கள் கொரோனா பற்றிய தவறான செய்திகளை உங்களிடம் இருந்து நீக்கி உள்ளோம் என நாங்கள் நம்புகிறோம்.

இனிமேலாவது தவறான செய்திகளை நம்பி மக்கள் பயமோ, அவசரப்படவோ வேண்டாம். இது சரியானது தான என்பதை உணர்ந்து செய்திகளை மற்றவர்களுக்கு பார்வர்ட் செய்யுங்கள்.

ஏனெனில் தவறான விழிப்புணர்வு கூட பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். கொரோனா பற்றிய விழிப்புணர்வு சரியாக இருந்தால் மட்டுமே இந்த தொற்று நோயை நம்மிடம் இருந்து விரட்டி அடிக்க முடியும் மக்களே என்று உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.