ஷில்பா ஷெட்டி வழங்கும் ப்ரெக் ஃபாஸ்ட் ரெசிபி

சியா மற்றும் ஆளி விதைகளில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் போன்ற சத்துக்கள் இருக்கிறது.
ஷில்பா ஷெட்டி பல வருடங்களாக தொடர்ந்து யோக பயிற்சி செய்து வருபவர்.காலை உணவாக இதனை சாப்பிடலாம்.யோக பயிற்சிக்கு முன் இதனை சாப்பிட உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பாலிவுட் பிரபலமான ஷில்பா ஷெட்டியின் யோக பயிற்சி வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். வருடாவருடம் உலக யோகா தினம் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. யோக பயிற்சி செய்வதால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவை இணைக்கும் ஒரு பாலம் ஆகும். தினசரி யோக பயிற்சி செய்பவர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும். அதேபோல, யோக பயிற்சி செய்வதற்கு முன் மற்றும் பின் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்பது குறித்து இங்கு பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை.

நடிகை ஷில்பா ஷெட்டி அவருடைய யோக பயிற்சி குறித்தும், பயிற்சிக்கு முன் அவர் என்ன சாப்பிடுவார் என்பது குறித்தும் ஆலோசனை கூறியுள்ளார். பயிற்சி முன், பேரிக்காய், மாம்பழம், ஓட்ஸ், பாதாம் பால், சியா விதை, தேங்காய் துருவல், ஆளி விதை மற்றும் மேப்பிள் சிரப் சேர்த்து சாப்பிடுவாராம். அதனை எப்படி செய்வது என்பது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.


தேவையான பொருட்கள்

ஓட்ஸ் – 1 கப்

பாதாம் பால் -11/2 கப்

பாதாம் – ½ தேக்கரண்டி

மாம்பழம் – 1

வென்னிலா எசன்ஸ் – ½ தேக்கரண்டி

சியா விதை – 11/2 தேக்கரண்டி

மேப்பிள் சிரப் – 1 தேக்கரண்டி


செய்முறை:

இரவு தூங்கும் முன் பாதாம் பாலில் ஓட்ஸை ஊற வைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸியில் ஊற வைத்த ஓட்ஸ், பாதாம் பால், நறுக்கிய பாதாம், ஊற வைத்த சியா விதை, மாம்பழம், வென்னிலா எசன்ஸ் மற்றும் மேப்பிள் சிரப் அல்லது தேன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

பின் இதனை ஒரு பௌலில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய மாம்பழ துண்டுகளை வைக்கவும். அடுத்து நறுக்கிய பேரிக்காய், நறுக்கிய பாதாம், சியா விதை, ஆளிவிதை, பிஸ்தா ஆகியவை சேர்த்து சாப்பிடலாம்.

இவற்றில் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. காலை உணவாக சாப்பிட சிறந்தது. சியா மற்றும் ஆளி விதைகளில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் போன்ற சத்துக்கள் இருக்கிறது. இந்த ஸ்மூத்தி பௌலில் 300 கலோரிகள் உள்ளன.