மும்பை ஸ்டைலில் பாவ் பாஜி புலாவ் செய்வது எப்படி

இந்த தவா புலாவை அதே மும்பை ஸ்டைலில் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தவா புலாம் மும்பையில் கிடைக்கக்கூடிய பிரசித்தி பெற்ற உணவு.காய்கறிகளும் சாதமும் சேர்த்து செய்யப்படுகிறது.தவா புலாவ் சில நிமிடங்களில் செய்யக்கூடிய ரெசிபி.

சமோசா, பாவ் பாஜி, தாஹி பல்லா, ஜிலேபி போன்ற உணவுகள் வட இந்தியாவின் தெருவோர கடைகளில் பிரசித்தி பெற்றது. குறிப்பாக மும்பை பகுதியில் இதுபோன்ற உணவுகளுக்கு மவுசு அதிகம். ஆனால் மும்பை என்றாலே தவா புலாவ் அல்லது பாவ் பாஜி புலாவ் தான் எல்லோர் நினைவிற்கும் வரும்.

காரணம் அதன் ருசி. இந்த பாவ் பாஜி புலாவ் தயாரிப்பது மிகவும் எளிமையானது. இதனை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சில நிமிடங்களில் தயார் செய்யலாம். சாதத்துடன் காலிப்ளவர், தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட் ஆகிய காய்கறிகளுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த புலாவ் ரெசிபி மிகவும் ருசியாக இருக்கும். ஆரோக்கியம் நிறைந்ததும் கூட. இந்த தவா புலாவை அதே மும்பை ஸ்டைலில் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான


தேவையான பொருட்கள்

சாதம் – 3 கப்
தக்காளி – 2 கப்
கேரட் – 1/4 கப்
உருளைக்கிழங்கு – 1 கப்
காலிப்ளவர் – 1 கப்
பச்சை பட்டாணி – 1/2 கப்
இஞ்சி – 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 11/2 தேக்கரண்டி
சோம்பு தூள் – 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி
சிலேண்ட்ரோ – 1/4 கப்


செய்முறை:

அடுப்பில் தவா வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சற்று சூடானதும் அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும் தக்காளி சேர்க்கவும்.

தக்காளியை 2 – 3 நிமிடங்கள் நன்கு வதக்கிய பின் அதில் துருவி வைத்திருந்த இஞ்சி, சோம்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.

மசாலா வாசனை நீங்கியதும் அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, காலிஃப்ளவர் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி வேக வைக்கவும்.

காய்கறிகள் பாதியளவு வெந்தபின் அதில் வேக வைத்த சாதத்தை அத்துடன் சேர்த்து 2 மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து வேகவைக்கவும்.

பின் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, அடுப்பை நிறுத்திவிடவும். பின் அதில் கரம் மசாலா மற்றும் சிலேண்ட்ரோவை தூவி கிளறி இறக்கவும்.

தயாரான தவா புலாவை சூடாக பரிமாறவும்.