குழந்தைகளுக்கான முதல் உதவி பற்றி தெரிந்து கொள்வோம்

குழந்தைகளுக்கான முதல் உதவி பற்றி தெரிந்து கொள்வோம்

விபத்து என்பது சொல்லிக்கொண்டு வருவதில்லை, எப்போது, எப்படி வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதுவும் குழந்தைகளுக்கு வலியும் வேதனையும் என்றால் தாயிலிருந்து வீட்டில் உள்ள அனைவருமே துடித்துப்போவார்கள்.

முதல் உதவி என்பது மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்லும் முன் நாம், நோயாளியை வலியில் இருந்து நிவாரணம் தரும் வகையில் உதவிகளைச் செய்து அவர்களை சிகிச்சைக்கு அழைத்து செல்வது. முதல் உதவியானது எல்லா வயதினருக்கும் உரியது தான்.விபத்துக்கான வயது, சூழல் என்று எதுவுமில்லை தானே.

இரத்தம் வடிதல் (Cut or Scrape)

குழந்தைகள் ஓடியாடி விளையாடும் போது கீழே விழும் போது வரும் காயங்கள், நாய், பூனை கடித்தால் வரும் காயங்கள், கத்தி, பிளேடு போன்றவற்றால் ஏற்படும் காயங்கள் என ஏதாவது ஒரு விதத்தில் இரத்த காயம் ஏற்படுகிறது.

சிறிய காயம் எனில், அந்த காயத்தின் மீது விரல் வைத்து அழுத்தவும். சில நிமிடங்கள் கழித்து சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு Neosporin போன்ற மருந்தை போட்டு விடவும். பெரிய காயம், இரத்த போக்கு குறைய வில்லை என்றால் மருத்துவமனைக்கு செல்வது தான் சிறந்தது.

விலங்குகள் கடித்து வந்த காயம் எனில் சோப் போட்டு கழுவி பிறகு மருத்துவரிடம் செல்வது அவசியம்.

தீப்புண்கள்

வெந்நீரில் கைகளை விடுதல், கொதிக்கும் பாலை கொட்டி விடுதல், எரியும் ஊதுபத்தி, விளக்கு மூலம் சுட்ட புண்களை உடனடியாக குளிர்ந்த நீரில் காட்டவும். நீரின் குளிர்ச்சியானது மேல் தோலில் பட்ட சூடு உள் புண்ணாக ஆகாமல் தடுக்கும். பிறகு பர்னால் போன்ற ஆயின்மெண்ட் தடவவும். தீப்புண்களில் ஏற்பட்ட கொப்புளங்களை உடைக்காதீர்கள்.

மூக்கில் இருந்து ரத்தம் வருதல்

பாதிக்கப்பட்ட நபரை லேசாகத் தலையைக் குனிந்துகொண்டு உட்காரச் சொல்லுங்கள். வாயைத் திறந்து மூச்சுவிடச் சொல்லுங்கள். மூக்கின் இரண்டு துவாரங்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் அழுத்தமாக பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பிடித்துக்கொள்ள, ரத்தம் வடிவது நின்றுவிடும்.

மூக்கைப் பிடித்திருப்பதால், வாய் வழியாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. பயப்பட வேண்டாம். வாயிலிருக்கும் ரத்தத்தைத் துப்பச் சொல்லுங்கள். ரத்தம் நிற்கவில்லை என்றால், குளிர்ந்த நீரில் கர்ச்சீப்பை முக்கி எடுத்துப் பிழிந்துகொண்டு, மூக்கின்மேல் பத்து நிமிடம் வைக்கவும்.

ஐஸ் கட்டி கிடைத்தால் அதையும் மூக்கின் மீதும் மூக்கின் இரண்டு பக்கங்களிலும் வைக்கலாம்.
இத்தனை முயற்சிகளிலும் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்றால், தாமதிக்காமல் மருத்துவர் உதவியை நாட வேண்டும்.

மூக்கை சீந்தாதீர்கள்

மூக்கிலிருந்து ரத்தம் கசியும்போது எந்தக் காரணத்தைக்கொண்டும் மூக்கைச் சிந்தக்கூடாது.
விரலை நுழைத்து மூக்கை அடைக்கக் கூடாது.
மூக்கிலிருந்து ரத்தம் வடியும்போது, தலையை நிமிர்த்தக் கூடாது.
மருத்துவர் சொல்லாமல் எந்த ஒரு மூக்கு சொட்டு மருந்தையும் மூக்கில் விடாதீர்கள்.

Rates : 0