இனி சர்க்கரைக்கு பதில் வென்னிலா

இனி மில்க் ஷேக் தயாரிக்கும்போது, சர்க்கரையை அதிகமாக சேர்க்காமல் வென்னிலா சேர்த்து தயாரித்து பாருங்கள்.
இந்த கொளுத்தும் வெயிலில் குளிர்ச்சியாகவும் க்ரீமியாகவும் ஒரு க்ளாஸ் நிறைய மில்க் ஷேக் குடித்தால் எப்படி இருக்கும்?? அதனை கூடுதல் ருசியுடன் ஆரோக்கியமாக வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா? உங்கள் நாவின் சுவை அரும்புகளை மலர செய்வதற்கு தான் சுவையான மில்க் ஷேக் ரெசிபி குறிப்புகளுடன் வந்திருக்கிறோம்.

பொதுவாகவே மில்க் ஷேக்களில் கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். மில்க் ஷேக்கின் ருசியை அதிகப்படுத்த சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. இந்த சர்க்கரையை தவிர்த்து வென்னிலா சேர்க்கலாம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வென்னிலா சேர்ப்பதனால் இனிப்பு சுவை அதிகரிக்கிறதென தகவல் வெளியானது. மில்க் ஷேக்களில் வென்னிலா சேர்ப்பதனால் 20 முதல் 50 சதவிகிதம் வரை சர்க்கரையின் அளவு குறைக்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் மில்க் ஷேக்கின் சுவையும் அதிகரிக்கிறது.

நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இனிப்பு, கொழுப்பு மற்றும் உப்பு சுவையை மிதமாகவே பயன்படுத்த வேண்டும். இந்த ஆய்வில் சிலருக்கு கண்கள் கட்டப்பட்டு வென்னிலா சேர்க்கப்பட்ட மில்க் ஷேக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் வென்னிலா சேர்க்கப்பட்டதை எவராலும் கண்டறிய முடியவில்லை. காரணம் இதில் இருக்கக்கூடிய இனிப்பு தன்மை. ஆகையால் இனி மில்க் ஷேக் தயாரிக்கும்போது, சர்க்கரையை அதிகமாக சேர்க்காமல் வென்னிலா சேர்த்து தயாரித்து பாருங்கள்.