மனச்சிதைவு நோய்

மனச்சிதைவு நோய்

மனச்சிதைவு நோய் என்பது தீவிரமான மூளைக்கோளாறு பாதிப்பாகும். இந்த நோயால் இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் வழக்கத்திற்கு மாறாக அசாதாரணமாக நடந்துகொள்வார்கள். மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்வதில் சிக்கல் இருக்கும். தங்களது உணர்வுகளையும் செயல்பாடுகளையும் நிர்வகிப்பதில் சிக்கல் இருக்கும் சில நபர்கள் மீண்டும் பழைய நிலையை அடைய முடியும்.

மனச்சிதைவு நோய் பொதுவாக இளமைப் பருவத்தின் ஆரம்பத்திலோ அல்லது இளமைப் பருவ முடிவிலோ ஏற்படலாம். உலகளவில், 21 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனச்சிதைவு நோய் குழந்தைகளுக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மிகவும் அரிதாகவே ஏற்படுகிறது.

காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள் (Causes and Risk Factors)

காரணங்கள் (Causes)

எதனால் மனச்சிதைவு நோய் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் அறியப்படவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மரபியல்: பல மரபியல் காரணிகளும் சுற்றுச்சூழல் காரணிகளும் இணைந்து மனச்சிதைவு நோய் ஏற்படக் காரணமாவதாகக் கருதப்படுகிறது.
சுற்றுச்சூழல்: மன அழுத்தம் ஏற்படுத்தும் நிகழ்வுகள், வைரஸ் நோய் தொற்று அல்லது இவை இரண்டும் சேர்ந்த சூழல் சார் செயல்பாடுகளின் தூண்டலினால் மனச்சிதைவு நோய் ஏற்படலாம்.
மூளை வேதியியல்: குளூட்டோமேட் மற்றும் டோபமைன் போன்ற நரம்புக் கடத்திகளில் ஏற்படும் சிக்கல்கள் மனச்சிதைவு நோய் ஏற்பட வழிவகுக்கலாம்.
அறிகுறிகளும் அடையாளங்களும் (Symptoms and Signs)

மனச்சிதைவு நோய் என்பது நடத்தை, சிந்தனை அல்லது உணர்வுகள் சார்ந்த தொடர் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகளும் அடையாளங்களும் நபருக்கு நபர் மாறுபட்டாலும் அவரது செயல்திறனைக் குறிப்பிட்டளவில் குறைத்துவிடும். இதன் அறிகுறிகள் பின்வருமாறு:

மருட்சி: இதனால் பாதிக்கப்பட்ட நபர் சில பிரபலங்களைப் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களாகவோ அல்லது யாரேனும் அவர்களை உளவு பார்த்தவாறு இருப்பதைப் போன்ற உணர்வுடன் பயந்தவாரோ இருக்கலாம்.
பிரமைகள்: உண்மையில் இல்லாத சில விசயங்களைக் கேட்டல், உணர்தல், வாசனை உணர்தல், ருசி பார்த்தல் முதலிய செயல்களில் அவர்கள் ஈடுபடலாம்.
ஒழுங்கீன சிந்தனை (பேச்சு): ஒரு விசயத்தைப் பேசுவதில் இருந்து மற்றொரு விசயத்துக்கு தொடர்பில்லாத நேரத்தில் மாறுதல் மற்றும் பேசும் போது அர்த்தமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
எதிர்மறை அறிகுறிகள்: சமூகத்துடன் தொடர்பின்மை, கடுமையான அக்கறையின்மை, முயற்சியின்மை, பிரமை பிடித்தது போல் அசையாதிருத்தல் முதலியன உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படலாம்.
நோய் கண்டறிதல் (Diagnosis)

மனச்சிதைவு நோயானது முந்தைய மருத்துவ வரலாறு, மனநல மதிப்பீடு, உடல் பரிசோதனை மற்றும் ஆய்வக சோதனைகள் முதலியவற்றின் அடிப்படையில் கண்டறியப்படுகிறது.

மனநல மதிப்பீடு – அறிகுறிகள் குறித்த பல்வேறு கேள்விகள், குடும்ப வரலாறு, ஆரோக்கியப் பிரச்சினைகள் குறித்த வரலாறு, சாத்தியமான வன்முறையில் ஈடுபடல், மனநிலை மாற்றங்கள் மற்றும் மாயத்தோற்றம் தோன்றுதல் முதலியவை பற்றி ஒரு மனநல மருத்துவர் கேட்டறிவார்.
பரிசோதனைகள்: ஏதேனும் உடல்நிலைச் சிக்கல்கள் இருக்கிறதா எனக்கண்டறிய சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மூளையில் ஏதேனும் மனச்சிதைவு நோய் தொடர்புடைய முரண்பாடுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய மூளையில் எம்ஆர்ஐ அல்லது சி.டி ஸ்கேன் செய்யப்படலாம்.
மனச்சிதைவு நோய்க் கண்டறிதலின் நிபந்தனைகள் (Criteria for diagnosis of schizophrenia)

பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதல், மற்ற கோளாறுகள் முதலிய காரணங்களைத் தவிர்த்து ஒருவருக்கு 6 மாதங்களுக்கும் மேலாக குறிப்பிட்ட சில தொந்தரவுகளுடன் கீழே குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் 2 அறிகுறிகள் ஏற்படுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்:

மாயத்தோற்றங்கள்
மருட்சி
ஒழுங்கற்ற பேச்சு
காண சகியா நடத்தை
மிகவும் ஒழுங்கற்ற நடத்தை
சாதாரண செயல்பாடுகளைப் பாதிக்கும் எதிர்மறை அறிகுறிகள்
குறிப்பிட்ட இரண்டு அறிகுறிகளில் ஒன்று மாயத்தோற்றங்கள், மருட்சி அல்லது ஒழுங்கற்ற பேச்சாக இருக்க வேண்டும்.

சிகிச்சை மற்றும் தடுப்பு (Treatment and Prevention)

சிகிச்சை (Treatment)

மனச்சிதைவு நோயை குணப்படுத்த முடியாது. எனினும் அதனை நிர்வகிக்க முடிவதுடன் பின்வரும் பல்வேறு வழிகளில் சிகிச்சை அளிக்கலாம்:

ஆன்டிசைகோடிக் மருந்துகள்
புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை, வலியுறுத்தும் சமூக சிகிச்சை மற்றும் ஆதரவு சிகிச்சை முதலிய உளவியல் சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்.
சுய மேலாண்மை உத்திகள் மற்றும் கற்பித்தல்
மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் தகுந்த சிகிச்சை அளிப்பதால் அவர்களது நிலையை நிர்வகிக்க இயலும்.

தடுப்பு (Prevention)

மனச்சிதைவு நோயைத் தடுக்க திட்டவட்டமான வழிமுறைகள் ஏதுமில்லை. எனினும், அன்றாட செயல்பாடுகள் தடைபடும் அளவிற்கு சிக்கல்கள் எழும் முன்னர் ஆரம்ப நிலையில் சிகிச்சை மேற்கொள்வதால் அறிகுறிகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

ஆபத்துக் காரணிகள் பற்றி அறிந்து வைத்திருப்பது, மனச்சிதைவு நோய்க்கான ஆரம்பநிலை நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையைத் துவங்க உதவும்.

சிக்கல்கள் (Complications)

மனச்சிதைவு நோயுடன் தொடர்புடைய சிக்கல்கள் பின்வருமாறு:

தன்னையே காயப்படுத்திக் கொள்ளுதல்
பயங்கள், மனக்கவலை அல்லது மன அழுத்தம்.
சமூகத்தில் இருந்து தனித்திருத்தல்
சுகாதார பிரச்சினைகள்
தற்கொலை
அடுத்த நிலைகள் (Next Steps)

பெரும்பாலும் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை மனநிலை பாதிப்பின் காரணமாக ஏற்பட்டிருக்கிறது என்பதும் அதற்கு தகுந்த சிகிச்சை அவசியம் என்பதும் பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை. எனவே அவர்களது நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் அவர்களுக்கு ஆதரவு அளித்து உதவுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.

எச்சரிக்கை (Red Flags)

மனச்சிதைவு நோய் பாதிக்கப்பட்ட நபர் பெரும்பாலும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருப்பார். ஒருவேளை பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளது அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டவராக இருந்தால் அவருடன் கட்டாயம் ஒருவர் தங்கி இருப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அத்தகைய நபர்களை தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று அவரின் உதவியையும் ஆலோசனையையும் பெற வேண்டும்.

Rates : 0