இன்சோம்னியா தூக்க நோய் காரணிகளும் தீர்வுகளும்

இன்சோம்னியா தூக்க நோய் காரணிகளும் தீர்வுகளும்

பெரும்பாலான மக்களுக்கு நல்ல தூக்கம் என்பது அரிதான விஷயமாக இருக்கிறது. தூக்கம், தூக்கமின்மை போன்றவற்றை ஆராய்ந்து மக்களின் ஆரோக்கியத்திற்கு வழிசெய்யும் பொருட்டு, அமெரிக்காவில் நிறுவப்பட்ட National Sleep Foundation (NSF) படி, 40 மில்லியன் அமெரிக்கர்கள் சரியான தூக்கம் பெறுவதில்லை என்றும், பெரியவர்களில் 60% பேர்களுக்கு வாரத்தில் சில நாட்கள் தூக்கம் வருவதில் பிரச்சினை என்றும் சொல்கிறது.

தூக்கமின்மைவின் (இன்சோம்னியா) அறிகுறிகள்:

தூக்கம் வருவதில் பிரச்சினை, இரவில் அடிக்கடி தூக்கத்திலிருந்து விழிப்பு வருதல், தூக்கம் சீக்கிரமே கலைந்து எழுந்து கொள்ளுதல் அல்லது தூங்கி எழுந்த பின் சரியான ஓய்வு கிடைக்காததுபோல் உணர்தல்.

இன்சோம்னியாவை ஏற்படுத்தும் காரணிகள்:

மன அழுத்தம், மனச்சோர்வு, அளவுக்கதிகமான எடை, உயர் இரத்த அழுத்தம், அதிகப்படியான மன ஓட்டம், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, மாதவிடாய் நின்றுபோகும் நேரம் மற்றும் உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகள்.

நல்ல தூக்கம் ஏன் அவசியம்?

நாட்பட்ட இன்சோம்னியாவால் உடற்பருமன், மன அழுத்தம், பதற்றம், சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள்கூட உண்டாக வாய்ப்புள்ளது. நல்ல தூக்கம் என்பது நமது அன்றாட ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்க்கைக்கும் அத்தியாவசிய அடிப்படைத் தேவை. இன்று பலரின் உடலிற்கும் மனதிற்கும் கிடைக்கும் ஒரே ஓய்வு தூக்கம் மட்டும்தான். மனஅழுத்தம் மற்றும் UV கதிர்களால் சேதமடைந்த செல்களை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், சரியான மனநிலை, உடல்சக்தி, மனத்தெளிவு ஆகியவற்றை முறைபடுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்து கொள்வதற்கும் உடலுக்குத் தூக்கம் அவசியம். அது மட்டுமல்ல; நோய் எதிர்ப்பு மண்டலம் கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கும், சர்க்கரை அளவைச் சீர் செய்வதற்கும், நமது உற்பத்தித் திறன் மேம்படுவதற்கும், ஆரோக்கியமான உறவுகளைப் பேணுவதற்கும்கூட மனிதனுக்கு நல்ல தூக்கம் அவசியம். இது அத்துடன் முடிவதும்கூட அல்ல… விழிப்பாய் இருப்பதற்கும், ஞாபகத் திறனையும் தக்க வைத்துக் கொள்ளவும் மனதிற்கும்கூட தூக்கம் தேவைப்படுகிறது. நாட்பட்ட இன்சோம்னியாவால் உடற்பருமன், மன அழுத்தம், பதற்றம், சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள்கூட உண்டாக வாய்ப்புள்ளது. நல்ல தூக்கம் என்பது நமது அன்றாட ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்க்கைக்கும் அத்தியாவசிய அடிப்படைத் தேவை. இன்சோம்னியாவிற்கு, பொதுவாக மருந்துகளும் மாத்திரைகளும் தீர்வாக வழங்கப்படுகின்றன. அல்லது மனநல சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதைத் தவிர்த்து இதற்கான இயற்கை அணுகுமுறைகள் என்று பார்த்தால், வாழ்க்கை முறையை மாற்றுதல் அல்லது உணவுமுறைகளை மாற்றுதல் மற்றும் இயற்கை மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவையும் உள்ளன.

உடலை நிலைகுலைத்து, இன்சோம்னியாவை உண்டாக்கும் உணவுப்பொருட்கள்:

மதுபானம், டீ, காபி, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், சர்க்கரை / உப்பு அதிகமுள்ள உணவு வகைகள், மற்றும் ஜங்க் ஃபுட் (பெரும்பாலும் இவற்றில் காஃபின் கலந்திருக்கும்).

இன்சோம்னியாவைக் குறைக்கும் மெக்னீசியம் அதிகமுள்ள உணவுகள்:

கீரை, பீன்ஸ், பருப்பு, வெண்ணெய், வாழைப்பழங்கள் மற்றும் முழு தானியங்கள். யோகப் பயிற்சி, நம் உடலின் செயலாற்ற அமைப்பை இயற்கையுடன் ஒத்திசைவில் வைக்க உதவும்.

இன்சோம்னியாவிற்குப் பரிந்துரைக்கப்படும் ஒரு எளிய, இயற்கைத் தீர்வு:

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், ஒரு தேக்கரண்டி மஞ்சள் மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். படுக்கைக்குச் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன் இதைப் பருகவும். உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை இன்சோம்னியாவை உண்டாக்குவதில் முக்கிய காரணியாக அமைகிறது. இந்த நவீன யுகத்தில் எல்லாமே ஒரு க்ளிக்கில் நடப்பதாலும், தேவையானதெல்லாம் தடுக்கிவிழும் தூரத்தில் கிடைப்பதாலும், நமது தாத்தா-பாட்டிமார்களை விட நமது உடலுழைப்பு மிகக் குறைவாக உள்ளது. 1965-ல் இருந்து 2009-க்கு இடையில் அமெரிக்காவில் மக்கள் உடலுழைப்பின்றி இருக்கும் நேரம் 40% அதிகரித்துள்ளதாம். உடலளவில் இயக்கமற்று இருப்பது இன்சோம்னியா, மனஅழுத்தம் மற்றும் பிற ஆரோக்கியப் பிரச்சனைகளை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மற்றொரு ஆய்வு, உலகிலுள்ள 1.5 பில்லியன் இளைஞர்கள் (குறிப்பாக அதிக வருமானம் வரும் நாடுகளில் உள்ளவர்கள்) முற்றிலுமாக உடலுழைப்பின்றி இருப்பதாகத் தெரிவிக்கிறது. அதாவது, இந்த இளைஞர்கள் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் (பரிந்துரைக்கப்பட்ட அளவு) அதாவது ஒருநாளைக்கு 20 நிமிடங்கள்கூட நடப்பதில்லை! இதே ரீதியில் நம் நாட்டிலும் உடல் உழைப்பு குறைந்துவிட்டால், தூக்கமாத்திரை இல்லாமல் படுக்கைக்குச் செல்லமுடியாது எனும் நிலை வரும்.

இன்சோம்னியாவைக் குறைப்பதற்கு, நாள்தோறும் ஏதோ ஒருவகையில் உடலளவில் செயல்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்குச் சில குறிப்புகள்:

ஒரு வாரத்தில் 5 நாட்களேனும், குறைந்தது 30 நிமிடங்கள் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் உடற்பயிற்சியை இரவு உணவிற்கு முன்னதாக, முடிந்தவரை 7 மணிக்கு முன்பே செய்துவிடுங்கள். அப்போதுதான் தூங்கச் செல்வதற்குமுன் உங்கள் இதயத்துடிப்பும், உடலும் ஒரு சமநிலையை அடையும். கடைகளுக்குப் போவதற்கு வண்டியில் செல்வதற்குப் பதிலாக நடந்து செல்லலாம் அல்லது சைக்கிளில் செல்லலாம். குழந்தைகளுடன் அதிகநேரம் விளையாடலாம். வேலை இடங்களில் லிஃப்ட்டுக்குப் பதிலாக படிகளில் ஏறி இறங்கலாம். சரிவிகித உணவை அளித்து, உடலுக்குத் தேவையான ஓய்வையும் அதற்குக் கிடைக்க வழிசெய்துவிட்டால்… உடலிலும், வாழ்விலும் பல பிரச்சினைகள் காணாமல் போய்விடும்!

Rates : 0